ஷா ஆலம், ஏப். 1- சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹர்மோனி, புத்ரா
ஹைட்ஸில் நேற்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய் தீவிபத்தில்
பாதிக்கப்பட்டவர்கள் மாநில பேரிடர் மேலாண்மைப் பிரிவிடம் பதிந்து
கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட தாமான் ஹர்மோனி மற்றும் கம்போங்
கோல சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் அனைவரும் உதவிகளைப்
பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் சௌகரியத்திற்கு
முன்னுரிமை அளிப்பதே மாநில மற்றும் மத்திய அரசுகளின் தற்போதைய
தலையாய நோக்கமாகும் என்று அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் சொத்துகளுக்கு பெரும் சேதத்தை
ஏற்படுத்திய அந்த எரிவாயு குழாய் கசிவு மற்றும் வெடிப்புச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக விரிவான விசாரணையை அதிகாரிகள் மேற்கொள்வர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 78 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதோடு பத்து
கடை வீடுகள் முழுமையாக அழிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவ இட கட்டுப்பாட்டு மையம் மேற்கொண்ட ஆய்வில் 327
வாகனங்களும் முற்றாக சேதமடைந்தது கண்டறியப்பட்டது என்றார்
அவர்.
இதனிடையே, நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வந்த பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் இந்த சம்பவத்தில் கடுமையான சேதத்திற்குள்ளான
வீடுகளின் உரிமையாளர்களுக்கு உதவித் தொகையாக 5,000 வெள்ளி
வழங்கப்படும் எனக் கூறினார்.
அதே சமயம், இந்த தீ விபத்தில் லேசாக சேதமடைந்த 100 வீடுகளின்
உரிமையாளர்களுக்கு தலா 2,500 வெள்ளி வழங்கப்படும் என்றும் அவர்
சொன்னார்.


