கோலாலம்பூர், ஏப். 2- சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் நேற்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
கம்போங் லொம்போங் பூச்சோங், பத்து தீகா, ஷா ஆலம் மற்றும் கிள்ளானில் உள்ள நான்கு முக்கிய வால்வுகள் நேற்று காலை மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்த குழாயில் எரிவாயு ஓட்டம் முற்றிலுமாக நின்று போனதால் இரண்டாம் கட்ட வெடிப்புக்கு சாத்தியமில்லை அதன் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
தீயணைப்பு புலனாய்வுக் குழு உள்ளே நுழைந்து தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதை இந்த ஏற்பாடு எளிதாக்கியது.
குடியிருப்பாளர்கள் அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் தங்கள் வீடுகளுக்குச் உடமைகளை அல்லது செல்லப் பிராணிகளை மீட்கச் செல்லலாம். இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதியில் தற்போது மின்சார விநியோகம் இல்லை என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த சம்பவத்தில் 237 வீடுகள் சேதமடைந்த வேளையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 305 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும் அவர்களில் பெரும்பாலோர் தீக்காயங்கள் மற்றும் வெப்பக் காற்றை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹிஷாம் மேலும் கூறினார்.
இந்த தீவிபத்தில் 78 வீடுகள் மற்றும் 10 கடைவீதிகளை உள்ளடக்கிய மொத்தம் 88 கட்டிடங்கள் 10 முதல் 90 சதவீதம் வரை எரிந்தன. மேலும் சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.


