ஷா ஆலம், ஏப். 1- புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் இன்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய் தீ விபத்தைத் தொடர்ந்து சுபாங் ஜெயாவில் உள்ள மேப்பள் லீஃப் கிங்ஸ்லி அனைத்துலகப் பள்ளியும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.
இந்த கடுமையான தீ விபத்து பள்ளி நடவடிக்கைகளை சீர்குலைத்ததோடு சுற்றியுள்ள பகுதியும் அடர்ந்த புகையால் மூடப்பட்டிருந்தது. 500 மீட்டர் உயரத்திற்கு எழுந்த தீப்பிழம்புகளை தூரத்திலிருந்தும் கூட காண முடிந்தது..
பாதுகாப்பு நடவடிக்கையாக பள்ளியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பள்ளி கட்டிடத்தின் மேல் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தீ விபத்து அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. தீயணைப்புத் துறையின் ஆய்வின்படி 49 வீடுகள் சேதமடைந்து 112 குடியிருப்பாளர்கள் காயமடைந்துள்ளனர்.
தீப்பற்றி எரியும் பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீயணைப்புத் துறையும் தொடர்புடைய நிறுவனங்களும் தீயை அணைப்பதிலும் குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் தற்போது புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் திறக்கப்பட்ட தற்காலிக வெளியேற்ற மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


