கோலாலம்பூர், ஏப். 1 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மோனியில் எரிவாயுக் குழாயில் ஏற்பட்டத் தீ இன்று பிற்பகல் 1.55 மணி நிலவரப்படி தணிந்து கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் தீ பரவலின் அளவும் குறைந்துள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 49 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சிலாங்கூர் துணை காவல்துறைத் தலைவர் டி.சி.பி முகமட் ஜைனி அபு ஹாசன் முன்னதாகக் கூறியிருந்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக சைபர்ஜெயா, செர்டாங் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட 49 பேருக்கு சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.
எரிவாயு குழாய்க்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்கப்பட்ட போது, தீ விபத்துக்கான காரணத்தை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது என்று ஹிஷாம் பதிலளித்தார்.
சம்பவத்திற்கான காரணம் குறித்து நாங்கள் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு இது பொருத்தமான தருணமல்ல என்று நான் நினைக்கிறேன். எனவே சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண காவல்துறை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
விசாரணை முடிந்ததும் சம்பவத்திற்கான காரணத்தை நாங்கள் தெரிவிப்போம். இப்போதைக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பல அறிக்கைகள் வந்துள்ளன. ஆனால் எங்களால் முன்கூட்டியே உறுதிப்படுத்த முடியாது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.


