ஷா ஆலம், ஏப். 1 - சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸ் பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையம் அருகே தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பொதுமக்களை கேட்டுக்கொண்டார் .
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்கும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக அந்தப் பகுதியைப் பாதுகாப்பானதாக அறிவிப்பதற்கு இடம் கொடுக்குமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது. காலை 8.10 மணி முதல் 78 மீட்புப் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கசிவு ஏற்பட்ட பகுதிக்கு அருகே எரிவாயு குழாய் வால்வுகளை பெட்ரோனாஸ் மூடியுள்ளது. இருப்பினும், குழாயில் மீதமுள்ள எரிவாயு காரணமாக தீ இன்னும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று காலை 11.00 மணி நிலவரப்படி இரண்டு மூத்த குடிமக்கள் உட்பட ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை வெளியேற்றியுள்ளனர் என்று அமிருடின் அறிக்கை ஒன்றில் கூறினார்.
வெளியேற்றப்பட்டவர்களை தங்க வைப்பதற்காக புத்ரா ஹைட்ஸ் பள்ளிவாசலில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு ஒரு தற்காலிக நிவாரண மையத்தைத் திறந்துள்ளதாகவும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை ஊழியர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்போதைய நமது தலையாயப் பணி தீயைக் கட்டுப்படுத்துவதும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதும் ஆகும். இந்த சவாலான சூழ்நிலையில் பணியில் உள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் அரசு நிறுவன ஊழியர்களையும் இறைவன் பாதுகாக்க நான் பிரார்த்திக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை தங்க வைப்பதற்கு யு.எஸ்.ஜே. 9 இல் உள்ள அல்-ஃபலாஹ் பள்ளிவாசல் மற்றும் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் ஆகியவை திறக்கப்பட்டுள்ளதாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இதற்கிடையில், காலை 10.35 மணியளவில் 25 பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீ மகா காளியம்மன் கோயிலில் முதலுதவி அளிக்கப்பட்டு வருவதாக பெர்னாமா கூறியது.
காயங்கள், தீக்காயங்கள் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதார அமைச்சின் ஊழியர்கள் சிகிச்சை அளித்து வருவதைக் காண முடிந்தது. பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மேல் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது


