சுபாங் ஜெயா, ஏப்.1- பூகம்பம் ஏற்பட்டது போல் பூமி அதிர்ந்தது. - சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹார்மோனி புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை எரிவாயு குழாய் தீப் பிடித்ததைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் இவ்வாறுதான் உணர்ந்தனர்
இன்று காலை 8.00 மணியளவில் தாயார், தந்தை மற்றும் இரண்டு தம்பிகளுடன் வீட்டில் இருந்த போது ஒரு வலுவான அதிர்வை தாம் உணர்ந்ததாக பாதிக்கப் பட்டவர்களில் ஒருவரான டான் ஜியா ஷின் (வயது 17) கூறினார்.
நாங்கள் அனைவரும் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தபோது தீ வெகு விரைவாகப் பரவுவதைக் கண்டோம். சம்பவம் நடந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து இரண்டு குறுக்குச் சாலைகளுக்கு அப்பால் இருந்தது.
அந்த சமயத்தில் நாங்கள் எங்கள் கர்ப்பிணித் தாயின் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே நினைத்தோம். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கார் உட்பட எதையும் வெளியே கொண்டு வராமல் வீட்டை விட்டு வெளியேறினோம் என்று அவர் பெர்னாமா சந்தித்தபோது கூறினார்.
இன்று காலை நிகழ்ந்த இச்சம்பவத்தில் தனது வீட்டின் கூரை இடிந்து வீட்டின் முற்றத்தில் இருந்த தனது வாகனம் மீது விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக இச்சம்பவத்தில்
இடது காலில் காயமடைந்த லீ வெங் கென் (வயது 42)
தெரிவித்தார்.
நான் வீட்டை விட்டு வெளியே சென்றேன். ஆனால் வீட்டின் அருகே எரிந்து கொண்டிருந்த தீயின் வெப்பம் தாளாமல் நான் கீழே விழுந்து காயமடைந்தேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தனது வீடு தீ விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்திருப்பதாக 52 வயதான ஏண்டி என அடையாளம் காணப்பட விரும்பும் மற்றொரு பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.
சம்பவம் நடந்தபோது நானும் 14 மற்றும் 18 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் பயங்கர அதிர்வை உணர்ந்தோம். தீ பரவுவதைக் கண்டதும் அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.
காரை வெளியே எடுக்க மட்டுமே நேரம் இருந்தது. 18 வயது மகள் வேலியில் ஏறும் போது கடுமையான வெப்பம் காரணமாக கீழே விழுந்து காலில் காயம் அடைந்தாள்.
வீட்டிலிருந்த பெரும்பாலான பொருட்கள் கடும் வெப்பத்தால் உருகி விட்டன. இதனால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுவது கடினமாகி விட்டது என்று அவர் கூறினார்.
சிறு காயங்களுக்கு ஆளான பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமிருந்து ஆரம்ப சிகிச்சை பெறுவதற்காக சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இன்று காலை 11.00 மணி நிலவரப்படி 30 பேர் ஆரம்ப சிகிச்சை பெற்றனர். மேலும் பலர் மேல் சிகிச்சைக்காக செர்டாங், புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.


