ஷா ஆலம், ஏப் 1- பூச்சோங்கில் இன்று காலை ஏற்பட்ட எரிவாயு குழாய்
தீச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை புத்ரா ஹைட்ஸ்
பள்ளிவாசலில் தற்காலிகமாக தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட இடத்தில் நிலைமை சீரடையும் வரை அவர்கள் அந்த
பள்ளிவாசலில் தற்காலிகமாக தங்க வைக்கப்படுவதாக மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு
வரும் வேளையில் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு
அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று
அவர் தெரிவித்தார்.
அங்கு நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் வரை வட்டார
மக்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக புத்ரா ஹைட்ஸ்
பள்ளிவாசலில் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது என்று
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹர்மோனி, புத்ரா ஹைட்ஸ் பகுதியில்
சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு எரிவாயு குழாயில் தீ ஏற்பட்டுள்ளதை
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட இடத்தில் தீ சுற்றுவட்டார பகுதிக்கும் பரவிய நிலையில்
தற்போதைக்கு இரு மூத்த குடிமக்கள் உள்பட எழுவர் அங்கிருந்து
வெளியேற்றப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை குறிப்பிட்டது.
சுபாங் ஜெயா, பூச்சோங், ஷா ஆலம், ரவாங் உள்ளிட்ட ஒன்பது
தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 78 தீயணைப்பாளர்கள் தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


