குவாந்தான், ஏப் 1- கோலாலம்பூர்- காராக் நெடுஞ்சாலையின் 50.8வது கிலோ மீட்டரில் குவாந்தான் நோக்கிச் செல்லும் தடத்தில் நிகழ்ந்த மூவரைப் பலி கொண்ட விபத்து தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு லோரி ஓட்டுநர் ஒருவரை போலீசார் நான்கு நாட்களுக்கு தடுத்து வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை பெந்தோங் போலீஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட 52 வயதான அந்த ஓட்டுநர் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1)வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜைஹான் முகமது கஹார் கூறினார்.
அந்த லோரி ஓட்டுநருக்கு நான்கு சம்மன்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறிய அவர், அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் சோதனை எதிர்மறையான முடிவைக் காட்டியதாக குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நிகழ்ந்த லோரி மற்றும் நான்கு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மூவர் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் காயங்களுக்குள்ளானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த விபத்தில் ஹோண்டா எக்கோட் காரில் பயணித்த வோங் கியான் இயோப் (வயது 29), அவரின் சகோதாரி வோங் வீ மூன் (வயது 34) மற்றும் லீ லாய் செங் (வயது 61) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த இதர நால்வரும் சிகிச்சைக்காக பெந்தோங் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 29 வயதுடைய லோரி உதவியாளரும் இதர வாகனங்களில் இருந்தவர்களும் இவ்விபத்தில் உயிர்த்தப்பினர்.


