கோலாலம்பூர், மார்ச் 31 -- பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளில் உதவுவதற்கும் மனிதாபிமானப் பணியைத் தொடங்கவும் மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழு (ஸ்மார்ட்) மியான்மரின் சகாய்ங் மாவட்டத்திற்கு சென்றுள்ளது.
மலேசியாவின் அந்த மனிதாபிமான உதவித் குழு கிட்டத்தட்ட 24 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு காவல்துறை உதவி மற்றும் பாதுகாப்புடன் அந்தப் பகுதியை அடைந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நாட்மா) தெரிவித்தது.
நடவடிக்கை இடத்தை அடைந்ததும் உதவிப் பணியை எளிதாக்குவதற்காக செயல்பாட்டுத் தளத்தை ஸ்மார்ட் குழு உடனடியாக நிறுவியது.
மாவட்ட அதிகாரி யு மியாவ் ஸ்வார் மவுங் சோ தலைமையிலான
உள்ளூர் அவசரநிலை மேலாண்மை அதிகாரிகளுடனும் ஸ்மார்ட் கட்டளை அதிகாரி சந்திப்பை நடத்தினார் என்று அது இன்று முகநூல் பதிவில் கூறியது.
மனிதாபிமான பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக அரச மலேசிய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு ஏ400எம் விமானங்களில் 50 ஸ்மார்ட் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மியான்மரின் நைபிடாவுக்கு நேற்று புறப்பட்டதாக பெர்னாமா முன்னதாகக் கூறியிருந்தது.
முதலாவது விமானம் நேற்று காலை 11.36 மணிக்கு தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது விமானம் பிற்பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. நட்மா உறுப்பினர்கள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தரைவழியாக சுமார் எட்டு மணி நேரம் பயணம் செய்து செயல்பாட்டு தளத்தை சென்றடைந்தனர்.
முகமது ஹபீஸூல் அப்துல் ஹலீம் தலைமையிலான இந்தப் படையில், மலேசிய ஆயுதப் படைகளைச் சேர்ந்த 16 பிரதிநிதிகளும், அரச மலேசியா காவல்துறையைச் சேர்ந்த 13 பிரதிநிதிகளும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த 21 பிரதிநிதிகளும் உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 28), மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இந் மண்டலே, பாகோ, மாக்வே, வடகிழக்கு ஷான் மாநிலம், சகாயிங் மற்றும் நய்பிடாவ் ஆகிய பகுதிகளை கடுமையாக பாதித்தது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்தையும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மியான்மரில் இறந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,000 பேரை எட்டியுள்ளது, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதோடு நூற்றுக்கணக்கானோரை இன்னும் காணவில்லை.


