குவாந்தான், மார்ச் 31- புலனம் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்ட
இல்லாத முதலீட்டுத் திட்டத்தினால் ஈர்க்கப்பட்ட நிறுவன தணிக்கையாளர் ஒருவர் 12 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை இழந்ததாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
நாற்பத்து மூன்று வயதான அந்தப் பெண் கடந்தாண்டு ஜூலை 16 ஆம் தேதி 'C Baird VIP' என்ற முதலீட்டு புலனக் குழுவில் முதன் முறையாகச் சேர்க்கப்பட்டதாக அவர் சொன்னார்.
துணை குத்தகையாளராகவும் இருக்கும் பாதிக்கப்பட்ட நபர் பின்னர் அடிப்படை தொகுப்பில் 50,000 வெள்ளியை முதலீடு செய்து அசல் தொகையுடன் 49,000 மூலதன லாபத்தையும் திரும்பப் பெற்றுள்ளார்.
பின்னர் கடந்தாண்டு ஜனவரி 16 முதல் மார்ச் 25 வரை அவர் ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 26 பணப் பரிவர்த்தனைகள் மூலம் செய்து மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை முதலீடு செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், 31 லட்சம் வெள்ளி என மதிப்பிடப்படும் லாபத் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான கட்டணமாக கூடுதல் பணத்தைச் செலுத்தும்படி பணிக்கப்பட்ட போதுதான் இதில் ஏதோ தவறு இருப்பதாக அவர் சந்தேகிக்கத் தொடங்கினார் என்று யஹாயா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தனது நகைகளை அடகு வைத்தும் நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியும் சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீடு செய்த அந்தப் பெண், இந்த மோசடி குறித்து நேற்று பெக்கான் மாவட்ட காவல் தலைமையகத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


