கெய்ரோ, மார்ச் 31 - காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் இடிபாடுகளுக்கும் வான்வழித் தாக்குதல்கள் குறித்த அச்சுறுத்தலுக்கும் மத்தியில் நோன்புப் பெருநாளைக் இன்று கொண்டாடியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் டி.பி.ஏ. தெரிவித்தது.
ரமலான் மாதத்தின் முடிவில் தெருக்கள் வழக்கமான ஆரவாரத்திற்குப் பதிலாக அமைதியாக இருந்தன. பலர் ஒருவருக்கொருவர் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்குப் பதிலாக இழந்த உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகு காஸா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் குண்டுவீச்சுகளைத் தொடங்கியுள்ளதால் பலர் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
வழக்கமாக நான் என் குழந்தைகளுக்கு சிறந்த ஆடைகளை உடுத்தி அவர்களுடன் உறவினர்களைக் காணச் செல்வேன் என்று ராஃபா நகரத்தைச் சேர்ந்த அமினா அல்-நட்ஜர் டி.பி ஏ. செய்தி நிறுவனத்திடம் கூறினார் .
இந்த பெருநாள் விடுமுறைக்கு ஏன் புதிதாக ஆடை எதுவும் அணிவிக்கவில்லை என்று என் மூன்று பிள்ளைகளும் கேட்கிறார்கள். "எங்களுக்கு சாப்பிடவே போதுமான அளவு உணவு இல்லை என்று நான் எப்படி அவர்களிடம் சொல்ல முடியும்?" என்று அவர் தன் மகளின் கிழிந்த ஆடையை வருடியவாறு சொன்னார்.
பெருநாள்களில் தயாரிக்கப்படும் உணவின் வழக்கமான இனிமையான வாசனையால் காஸா பகுதியிலுள்ள காற்று நிரப்பப்படவில்லை. மாறாக தாக்குதல்கள் மற்றும் சண்டைகளால் எழுந்த கடுமையான புகையால் நிரம்பியிருந்தது என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்
காஸா மக்களில் பெரும் பகுதியினர் அவசரகால தங்குமிடங்களிலும் கூடாரங்களிலும் வசித்து வருகின்றனர். ஒன்றரை வருட போருக்குப் பிறகு கடலோர நகரின் பெரும்பகுதி நிர்மூலமாகியுள்ளது.
வழக்கமான சில மரபுகளைப் பாதுகாக்கும் வகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழங்களை பரிசாகக் கொடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காஸா சுகாதார அதிகாரிகளின் புள்ளிவிவரங்களின்படி இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 50,000 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் இருபது லட்சம் குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் இடம் பெயர்ந்துள்ளனர்.


