புத்ராஜெயா, மார்ச் 31 — மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்தவொரு தனிநபரையும் தனது ஆலோசகராக நியமித்ததில்லை என்று அவரின் பத்திரிகைச் செயலாளர் அப்துல் ஹக்கீம் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து கருத்துரைத்த அவர், அமைச்சர் சிம்மின் ஆலோசகராகப் பணியாற்றியதாகக் கூறப்படும் ஒரு நபர் தொடர்பான தகவல் அமைச்சின் கவனத்திற்கு வந்துள்ளது என்றார்.
அமைச்சர் அலுவலகம் அல்லது மனிதவள அமைச்சில் உள்ள பதவிகள் தொடர்பான எந்தவொரு விளக்க கோரல்களும் அமைச்சின் அதிகாரப்பூர்வ வழிகளில் அனுப்பப்பட வேண்டும் என்று அப்துல் ஹக்கீம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பொதுமக்களிடம் 1 கோடி வெள்ளியை மோசடி செய்ததாக நம்பப்படும் டான் ஸ்ரீ அந்தஸ்து கொண்ட ஒரு தொழிலதிபர் மனிதவள அமைச்சரின் ஆலோசகராக இருந்ததாகக் கூறும் இணையதளத்தின் செய்தியைத் தொடர்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தொடர்பான வழக்கைத் தீர்க்கும் நோக்கத்திற்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப் போவதாகக் கூறி பெற்ற நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 30 வருட அனுபவமுள்ள ஒரு தொழிலதிபரை அரச மலேசியா காவல்துறை சனிக்கிழமை (மார்ச் 29) கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்த செய்தியாளர் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்று காவல் துறைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் உறுதிப்படுத்தினார்.


