ANTARABANGSA

தாய்லாந்தில் பூகம்பம்- சுற்றுலாத் தலங்கள் பாதுகாப்பாக உள்ளன- அரசு உத்தரவாதம்

31 மார்ச் 2025, 3:54 AM
தாய்லாந்தில் பூகம்பம்- சுற்றுலாத் தலங்கள் பாதுகாப்பாக உள்ளன- அரசு உத்தரவாதம்

பேங்காக், மார்ச் 31-  தாய்லாந்தில் அண்மையில் ஏற்பட்ட வலுவான  நிலநடுக்கத்திற்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதற்கு  நாடு பாதுகாப்பானதாக இருப்பதாக  அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்த இயற்கைப் பேரிடரில் சுற்றுலாப் பயணிகள் யாரும் காயமடையவில்லை என்பதோடு  சுற்றுலாத் தலங்களும் பாதிக்கப்படவில்லை என்று அதன் சுற்றுலாத் துறை  அமைச்சர் கூறியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டிபிஏ) தெரிவித்தது.

பயணங்கள்,  ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வுகள் வழக்கம் போல் தொடரும்  என்று அமைச்சர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறினார்.

பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்று  வருகின்றன. சுற்றுலா போலீசார் முக்கிய இடங்களை கண்காணித்து வருகின்றனர். பயணங்கள் ஏதும்  ரத்து செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

பேங்காக் மற்றும் பிரபலமான சுற்றுலா  தீவான புக்கெட் உள்ளிட்ட அனைத்துலக  விமான நிலையங்களும் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியுள்ளன என்று ஒழுங்குமுறை ஆணையம் அறிக்கை  ஒன்றில் தெரிவித்தது.

எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக  விமான நிலைய முனையம் மற்றும் ஓடுபாதை இதற்கு முன்னர்  ஆய்வு செய்யப்பட்டது.

தாய்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 12 சதவீத பங்களிப்பை சுற்றுலாத் துறை வழங்குகிறது.  நாட்டின் ஆள்பலத்தில்  20 சதவீதத்திற்கும் அதிகமானோரை இத்துறை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் கடந்தாண்டு தெரிவித்திருந்தார்.

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கத்தில் பேங்காக்கில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.   மேலும் குறைந்தது 83 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.