ANTARABANGSA

மியான்மார் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,700 பேராக அதிகரிப்பு

31 மார்ச் 2025, 3:18 AM
மியான்மார் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,700 பேராக அதிகரிப்பு

பேங்காக், மார்ச் 31-  அண்மையில் மியான்மாரில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டு மீட்புக் குழுக்களும் மனிதாபிமான உதவிகளும் வறிய நிலையிலுள்ள  அந்நாட்டிற்கு விரைந்த வண்ணம் உள்ளன. அங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலையில் குறைந்த வளங்களைக் கொண்டு மீட்பு முயற்சிகளை மேற்கொள்வது பெரும் போராட்டம் நிறைந்ததாக உள்ளது.

ரிக்டர் அளவில் 7.7  எனப்பதிவான  நிலநடுக்கம் மியான்மாரை கடந்த  வெள்ளிக்கிழமை உலுக்கியது. மியான்மாரில் ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில்   ஒன்றாக இது கருதப்படுகிறது.

போரினால் பெரிதும்  பாதிக்கப்பட்ட தென்கிழக்காசிய நாடான மியான்மாரில் இது வரை சுமார் 1,700 பேர் கொல்லப்பட்டதோடு மேலும்  3,400 பேர் காயமடைந்தனர்.  300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜூந்தா இராணுவ ஆட்சித் தலைவர் மின் ஆங் ஹ்லைங் அனைத்துலக  உதவிக்கு  கோரிக்கை  விடுத்துள்ளார். பூகம்பம் ஏற்பட்டு  மூன்று நாட்கள் ஆன நிலையில்   மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அவரது நிர்வாகம்  சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாக  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மாரின் அண்டை நாடுகளான  இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகியவையும் உடனடி உதவி வழங்கிய நாடுகளில்  அடங்கும். மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யாவிலிருந்து உதவி மற்றும் பணியாளர்களுடன் நிவாரணப் பொருட்களையும் குழுக்களையும் அனுப்பியுள்ளன.

பேரழிவு  மிகவும் மோசமானது.  மனிதாபிமான தேவைகள் மணிக்கு மணி  அதிகரித்து வருகின்றன என்று அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டில் வெப்பநிலை அதிகரித்து சில வாரங்களில் பருவமழை நெருங்கி வருவதால் இரண்டாம் கட்ட நெருக்கடிகள் ஏற்படுவதற்கு முன்பு பாதிக்கப்பட்ட சமூகங்களை நிலைப்படுத்த  வேண்டிய அவசியம் உள்ளது

பூகம்பம் காரணமாக 5.5 கோடி மக்கள் வசிக்கும் நாடு முழுவதும் பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே உள்ளிட்ட முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன,

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.