குவாந்தான், மார்ச் 31- கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் 50.7 வது கிலோமீட்டரில் பெந்தோங், கம்போங் லென்டாங் அருகே குவாந்தான் நோக்கிச் செல்லும் தடத்தில் நேற்று மாலை நிகழ்ந்த ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தோடு மேலும் மற்றும் நால்வர் காயமடைந்தனர்.
ஐந்து டன் லோரி, ஹோண்டா எக்கோர்ட், புரோட்டோன் வாஜா, புரோட்டோன் சாகா மற்றும் சுபாரு கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து குறித்து மாலை 4.55 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஹோண்டா எக்கோர்ட் காரில் பயணித்த ஒரு ஆடவரும் இரண்டு பெண்களும் இவ்விபத்தில் உயிரிழந்ததாகவும் அவர்கள் பலியானதை சம்பவ இடத்திலிருந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.
தீயணைப்புத் துறையினர் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இடிபாடுகளிலிருந்து மீட்டு மேல் நடவடிக்கைக்காக காவல் துறையிடம் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார்.
மேலும், அந்த ஹோண்டா எக்கோர்ட் காரிலிருந்த ஒரு பெண்ணும் இரு சிறார்களும் காயமடைந்தனர். அவர்களுக்கு சம்பவ இடத்தில் முதலுதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு அனுப்ப பட்டனர் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் இந்த விபத்தில் லோரி ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் மற்ற வாகனங்களில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட எட்டு பேர் விபத்தில் காயமின்றி தப்பினர் என அவர் குறிப்பிட்டார்.
மீட்புப் பணியில் பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மொத்தம் 10 உறுப்பினர்கள் ஈடுபட்டனர் என அவர் சொன்னார்.


