கோலாலம்பூர், 29 மார்ச் இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் விமான டிக்கெட் கட்டணங்களின் விலை கட்டுப்படுத்தப் படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
விலை உச்சவரம்பு நிர்ணயிக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சி மற்றும் பண்டிகை காலத்தில் விமானத் திறனை அதிகரிப்பதற்கான விமான நிறுவனங்களின் உறுதிப்பாட்டின் விளைவாக இது உள்ளது என்று அவர் கூறினார்.
"ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் இது ஒரு பெரிய சவால், ஆனால் நான் பெருமிதம் கொள்கிறேன், ஏனென்றால் இந்த ஆண்டு சபா, சரவாக் மாநிலங்களுக்கு செல்ல விமான டிக்கெட் விலை உயர்வினால் மக்கள் டிக்கெட்டுகளை வாங்க முடியவில்லை என்று நாங்கள் கேள்விப் படவில்லை. பண்டிகை காலத்தில் நாம் விலைக்கட்டுபாட்டை பின்பற்றுகிறோம்".
"மேலும், நம்மிடம் நிலையான குறைந்த கட்டண விமான சேவை உள்ளன" என்று அவர் இன்று ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
ஐடில்பித்ரியை தங்கள் அன்பான குடும்பங்களுடன் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் சபா மற்றும் சரவாக் பயணிகளைச் சந்திக்கும் வாய்ப்பு நேற்று தனக்கு கிடைத்ததாகவும் லோக் கூறினார்.
கூடுதல் வசதிகள் வழங்குவதில் விமான நிறுவனங்களின் முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார், ஏனெனில் இது ஒரு எளிதான பணி அல்ல, மேலும் கட்டுப்பாட்டாளர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய ஆபரேட்டர்கள் போன்ற பல்வேறு தரப்பினரிடையே உன்னதமான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
"மலேசியர்களின் சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்காக தங்கள் நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்யும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், கேபின் குழுவினர், விமானிகள் மற்றும் தரை பணியாளர்களின் வரிசையை மறந்துவிடக் கூடாது" என்று அவர் கூறினார்.


