கோலாலம்பூர், மார்ச் 29 — நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் நாட்டின் பல நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் இன்று காலை போக்குவரத்து மெதுவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் சுங்கை புவாயாவிலிருந்து புக்கிட் தாகர், லெம்பா பெரிங்கினிலிருந்து தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர் முதல் பீடோர், தாப்பாவிலிருந்து கோப்பெங், ஜாவியிலிருந்து புக்கிட் தம்புன், ஜூருவிலிருந்து பிறை, பெர்மாத்தாங் பாவ் முதல் பெர்த்தாங் வரை வாகனப் போக்குவரத்து மெதுவாக உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (எல்.எல்.எம்.) பேச்சாளர் கூறினார்.
தெற்கே நீலாயிலிருந்து சிரம்பான் ஆர்.என்.ஆர். வரையிலும் புத்ரா மக்கோத்தாவிலிருந்து நீலாய் வரையிலும் பண்டாரா ஐன்ஸ்டேலிலிருந்து செனாவாங் வரையிலும் போக்குவரத்து மெதுவாக உள்ளது. அதே நேரத்தில் கூலாயில் இருந்து செடெனாக் வரையிலும் இதே நிலை நீடிக்கிறது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
பிளஸ் நெடுஞ்சாலை தவிர, கோலாலம்பூர்-காராக் விரைவுச்சாலையில் கோம்பாக்கிலிருந்து லென்தாங் மற்றும் ஜாலான் உத்தாமா மெம்பாகா காராக் டோல் வரை வரை கிழக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் அதே நிலை பதிவாகியுள்ளது.
கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2 இல் கோல திரங்கானு டோல் சாவடி வரை வடக்கே செல்லும் 432.7 கிலோமீட்டரில் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது.
இதற்கிடையில், குவா மூசாங்-கோலா லிப்பிஸ் உள்ளிட்ட முக்கிய கூட்டரசு சாலைகளில் இன்று காலை 9 மணி நிலவரப்படி ஆறு கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


