கிள்ளான், மார்ச் 29- அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாளின் போது அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
பொருள் விநியோகப் பற்றாக்குறை தொடர்பில் அமைச்சு புகார்களைப் பெற்றுள்ள போதிலும் அது பெரிய எண்ணிக்கையில் இல்லை என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு கூறினார்.
ஓரிரு இடங்களில் இந்த பிரச்சினை நிலவுகிறது. ஆனால் பெரிய அளவில் இல்லை. சம்பந்தப்பட்ட இடங்களில் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டரசு விவசாயம் மற்றும் சந்தை வாரியம் (ஃபாமா) துரித நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு புகார்கள் குறைந்து காணப்படுகின்றன. பொருள்கள் பயனீட்டாளர்களைச் சென்று சேர்ந்துள்ளன என்று நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ அண்டலாஸ் பாசார் தானியில் தேசிய நிலையிலான செமாராக் ஷவால் 1446 ஹிஜ்ரா நிகழ்வைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு பொருள்களின் விலை கட்டுப்பாட்டிலும் மலிவாகவும் இருப்பதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பெரிதும் உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் அமைச்சின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 1982ஆம் ஆண்டு தாம் அமைச்சரவையில் பங்கேற்றது முதல் இப்போதுதான் முதன் முறையாக பெருநாளின் போது பொருள் விலை ஏற்றம் காணாததோடு குறைந்தும் காணப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முன்னதாக கூறியிருந்ததையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.
இதனிடையே, கடந்த மார்ச் 22 தொடங்கி நாளை வரை நாடு முழுவதும் 262 இடங்களில் நடைபெறும் செமாராக் ஷவால் 1446 ஹிஜ்ரா நிகழ்வில் இது வரை 1 கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் முகமது சாபு சொன்னார்.


