புத்ராஜெயா, மார்ச் 29- மியான்மரில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்க மலேசியா சிறப்பு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவை (ஸ்மார்ட்) அனுப்பவுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இந்த சிறப்புக் குழு இன்று பிற்பகல் 1.00 மணியளவில் யாங்கோனுக்கு சென்று சேரும் என்று மத்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவருமான அவர்
கூறினார்.
அதே சமயம், தாய்லாந்துக்கான மனிதாபிமான உதவிப் பணியும் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அது தொடங்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய மியான்மர், வட தாய்லாந்து மற்றும் தென் சீனாவின் சில பகுதிகளைத் தாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு உதவுவதற்காக மலேசியா தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திலிருந்து (நாட்மா) இரண்டு குழுக்களை மியான்மருக்கு அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சு இன்று ஒரு அறிக்கையில் கூறியது.
பூர்வாங்க மதிப்பீட்டின் போது அடையாளம் காணப்படும் முன்னுரிமை அளிக்க வேண்டிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 40 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது குழு நாளை அங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.7 எனப்பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் குறைந்தது 144 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 732 பேர் காயமடைந்ததாக மியான்மர் அரசாங்க நிர்வாக மன்றம் தெரிவித்தது.


