யாங்கூன், மார்ச் 29- மியான்மர் நாட்டை நேற்று உலுக்கிய ரிக்டர் அளவில் 7.7 எனப்பதிவான நிலநடுக்கத்தில் இதுவரை 144 பேர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ள வேளையில் மேலும் 732 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பூகம்பத்தில் தலைநகர் நேய் பை தாவ் தவ்வில் 96 பேரும் சாகாய்ங்கில் 18 பேரும் கியாஸ்கியில் 30 பேரும் பலியானது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மியான்மர் தேசிய நிர்வாக மன்றத்தின் தலைவர் தலைமை ஜெனரல் மின் ஆவுங் ஹியாங் கூறியதாக ஷின்ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் 432 பேர் நேய் பை தாவ் நகரையும் 300 பேர் சாகாய்ங்கையும் சேர்ந்தவர்கள் என்று ஜெனர் மின் ஆவுங் தெரிவித்தார்.
இந்த பூகம்பத்தில் பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு அனைத்துலக நாடுகளின் உதவியை ஜெனரல் மின் ஆவுங் நாடியுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.


