புத்ராஜெயா, மார்ச் 29 - மத்திய மியான்மர், வட தாய்லாந்து மற்றும் தென் சீனாவின் சில பகுதிகளைத் தாக்கிய வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் (நாட்மா) இரு குழுக்களை மலேசியா மியான்மருக்கு அனுப்பும்.
தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் கள நிலவரத்தை மதிப்பீடு செய்யவும் 10 நட்மா பணியாளர்களைக் கொண்ட தொடக்க மதிப்பீட்டுக் குழு இன்று யாங்கோனுக்குப் புறப்படும் என்று வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) தெரிவித்தது.
பூர்வாங்க மதிப்பீட்டின் போது அடையாளம் காணப்படும் முன்னுரிமை அளிக்க வேண்டிய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 40 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது குழு நாளை அங்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பெரிய குழு ஆரம்ப மதிப்பீட்டின் போது அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைப் பகுதிகளை சீரமைப்பு செய்வதில் கவனம் செலுத்தும். மலேசியாவின் உதவி இலக்கிடப்பட்டதாகவும் பொருத்தமானதாகவும் நடப்புச் சூழலுக்கு ஏற்ப பதிலளிக்கக்கூடியதாகவும் இருப்பதை அக்குழு உறுதி செய்யும் என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
நட்மா பணிக்குத் தேவையான அனைத்து விசா மற்றும் தளவாட ஏற்பாடுகளையும் விஸ்மா புத்ரா மேற்கொண்டு வருவதாகவும் யாங்கூனில் உள்ள மலேசியத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மனிதாபிமான சகாக்களுடன் கள ஆதரவையும் ஒருங்கிணைப்பையும் வழங்குவதாகவும் விஸ்மா புத்ரா மேலும் கூறியது
இந்த பூகம்ப பேரிடர் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த கவலை தெரிவித்ததோடு பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தார்.
ஆசியான் அண்டை நாடுகளுடனான மலேசியாவின் ஒற்றுமையையும், தொடர்ந்து நடைபெறும் மனிதாபிமான மற்றும் மீட்பு முயற்சிகளை ஆதரிக்க அந்நாட்டின் தயார்நிலையையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ரிக்டர் அளவில் 7.7 எனப்பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் குறைந்தது 144 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 732 பேர் காயமடைந்ததாக மியான்மர் அரசாங்க நிர்வாக மன்றம் தெரிவித்தது.


