கோலாலம்பூர், மார்ச் 29 - மத்திய மியான்மர் மற்றும் வட தாய்லாந்தில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பேங்காக்கின் மண்டலே மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் உயிரிழப்பும் பேரழிவும் ஏற்பட்டது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.
இடிந்து விழுந்த கட்டிடங்கள், அதில் சிக்கியுள்ள பொதுமக்கள் மற்றும் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவர் கூறினார்.
சீனாவின் தெற்கு யுன்னானில் நிலநடுக்கம் உணரப்பட்டு கட்டமைப்பு சேதம் பதிவாகியுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள நில அதிர்வுகளையும் நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம் என அவர் சொன்னார்.
தங்களின் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் மலேசியாவின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
அண்டை நாடுகளுடனும் சக ஆசியான் உறுப்பு நாடுகளுடனும் மலேசியா அசைக்க முடியாத ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு நிற்கிறது.
அதே சமயம், மியான்மரில் அதிகாரிகள் அறிவித்த அவசரகால நிலையையும் பேங்காக்கை பேரிடர் பாதித்த பகுதியாக தாய்லாந்து அரசாங்கம் அறிவித்ததையும் மலேசியாவும் கவனத்தில் கொள்வதாகவும் அன்வார் கூறினார்.
தேவையின் அடிப்படையில் மனிதாபிமான முயற்சிகளுக்கு உதவி செய்யவும் ஆதரவளிக்கவும் மலேசியா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மியான்மரில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தை மேற்கோள் காட்டி செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 6.4 ரிக்டர் அளவிலான பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வு ஏற்பட்டது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களின் அதிர்வுகள் சியாங் மாய், பேங்காக் மற்றும் வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.


