கோலாலம்பூர், மார்ச் 29- சுபாங் ஜெயா, எஸ்.எஸ்.14 இல் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையிட்டப் பின்னர் தப்பிச் செல்ல இரு கொள்ளையர்கள் மேற்கொண்ட முயற்சி காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது.
சுபாங் ஜெயா குற்றத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறையினர் 30 மற்றும் 40 வயதுடைய சந்தேக நபர்களின் காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தி
அவ்விருவரையும் கைது செய்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
இக்கொள்ளை தொடர்பில் பொதுமக்களில் ஒருவரிடமிருந்து பணியில் இருந்த அதிகாரிக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தேக நபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவரின் வீட்டை விட்டு வெளியேறி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் வாகனத்தை நோக்கிச் செல்வதைக் கண்டனர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வாகனத்திலிருந்த சந்தேக நபர்கள் தப்பும் முயற்சியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு போலீஸ்காரரை மோதியுள்ளனர். இதனால் மற்றொரு போலீஸ்காரர் சந்தேக நபர்களின் காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அஸ்லான் மேலும் கூறினார்.
எஸ்.எஸ்.14 மேம்பாலத்தை நோக்கி தப்பிச் சென்ற அக்கொள்ளையர்கள் போலீசாரால் வெற்றிகரமாக மடக்கி பிடிக்கப்பட்டனர் என்றார் அவர்.
வீடு புகுந்து கொள்ளையிட்டது தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 457வது பிரிவு மற்றும் கொலை முயற்சி தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 307வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.


