சுங்கை பூலோ, மார்ச் 28 - அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான சுமையை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களே சாலைகளில் சேதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன என்று பொதுப் பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
அதிக சுமை பிரச்சினை மீதான சிறப்புக் செயல் குழுவின் வாயிலாக பொதுப்பணி அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் தற்போது இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான வழிகள் பற்றி விவாதித்து வருகின்றன என்று அவர் சொன்னார்.
சாலைகள் சேதமடைவதற்கு கனரக வாகனங்கள் ஒரு வெளிப்படையான காரணம். அதனால்தான் சுமை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிகளை மீறுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து பொதுப்பணி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர்களும் அதிகாரிகளும் ஆலோசித்து வருகின்றனர் என்றார் அவர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு வாகனப் போக்குவரத்தை இன்று சுங்கை பூலோ மேம்பால உணவகத்தில் (வடக்கு தடம்) கண்காணித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
அனுமதிக்கப்பட்டதை விட 10 சதவீதத்திற்கும் அதிகமான சுமைகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் சாலைகளின் ஆயுட்காலத்தை 50 சதவீதம் வரை குறைக்கக்கூடும் என்ற செய்தி அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக நந்தா இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில் வரும் திங்கட்கிழமை (மார்ச் 31) கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு
அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் வாகனங்களின் அதிகரிப்பைச் சமாளிக்க பல்வேறு நிறுவனங்களின் தயார்நிலை நிலை மிகச் சிறப்பாக இருப்பதாக அவர் கூறினார்.


