கோலாலம்பூர், மார்ச் 28 - தங்கள் பராமரிப்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்களைச் சித்திரவதை செய்ததாக குடும்ப மாது மற்றும் அவரின் 29 வயது மகன் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி தஸ்னிம் அபு பாக்கார் முன்னிலையில் தங்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அவ்விருவரும் மறுத்து விசாரணை கோரினர்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை செந்தூலில் உள்ள ஒரு வீட்டில் ஆறு மற்றும் எட்டு வயதுடைய இரு சகோதரர்களை துன்புத்தியதாக 65 வயதுடைய அந்தப் பெண்ணும் அவரது மகனும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் பிரிவு 31(1) (ஏ) மற்றும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தலா ஒரு நபர் உத்தரவாதத்துடன் 7,000 ஜாமீனில் விடுவிக்க நீதிபதி தஸ்னிம் அபு பாக்கார் அனுமதி அளித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும் மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.


