கோலாலம்பூர், மார்ச் 28 - புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் மீண்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், கேஎல்ஐஏ-இன் இரண்டாவது முனையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய ஏகே128 விமான இயந்திரத்தில் தீப்பிடிக்கவில்லை என்பதை ஏர் ஆசியா நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது.
புதன்கிழமை இரவு சீனா, ஷென்ஸெனை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தின் இயந்திரத்தில் வழக்கத்திற்கு மாறான அறிகுறி தென்பட்டதனாலேயே அது அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் ஏர் ஆசியா விவரித்துள்ளது.
அந்த விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சேதமடைந்த குழாய் காரணமாக வெப்பக் காற்று வெளியேறியதால் அந்த அறிகுறி தென்பட்டதாகக் கண்டறியப்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தரையிறக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.
அந்த விமானம் மார்ச் 31-ஆம் தேதி மீண்டும் சேவைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், இந்த அறிகுறிக்கான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை விமானிகள் பின்பற்றியதாகவும் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அதன் தரையிறக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும்படி கோரியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னிரவு மணி 12.06-க்கு கேஎல்ஐஏ-இன் இரண்டாவது முனையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கிய அவ்விமானத்தில் இருந்த 171 பயணிகளும் ஆறு பணியாளர்களும் மற்றொரு விமானத்தின் மூலம் அதிகாலை மணி 3.46-க்கு சீனா புறப்பட்டனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மலேசிய பொது விமானப் போக்குவரத்து ஆணையம்,சிஏஏஎம்-இடம் இருந்து, தாம் தகவலைப் பெற்றதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
--பெர்னாமா


