லா பாஸ், மார்ச் 28 - பொலிவியாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் 50-க்கும் மேற்பட்டோர் மாண்டிருப்பதை தொடர்ந்து அந்நாட்டில் அவரசகால நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிவியாவின் ஒன்பது மாநிலங்களும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பொலிவியாவில், நவம்பர் முதல் மார்ச் வரை மழைக்காலம் காணப்படும்.
பொதுவாக தொடர் மழையினால் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டு ஏப்ரல் வரை நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை விநியோகிக்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
--பெர்னாமா


