கங்கார், மார்ச் 28 - முகநூல் பதிவில் இன்னொரு மதத்தை இழிவுப்படுத்தி, பொது அமைதியை சீர்குலைத்த புகார் தொடர்பில் சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் 2 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க பெர்லிஸ், கங்கார் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
41 வயதான சம்ரி வினோத் மீது 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டம், 1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெறவுள்ளது என தேசியக் காவல்துறை படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் உறுதிப்படுத்தினார்.
மஸ்ஜிட் இந்தியாவில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் இந்துக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் முகநூலில் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்ட கருத்துக்களில் தேசத்துரோகக் கூறுகள் இருப்பதாகவும், இந்து மதத்தை அவமதிப்பதாகவும் புகார்தாரர் கூறியதாக ரசாருடின் தெரிவித்தார்.
இதன் தொடர்பாக டாங் வாங்கி காவல்துறை நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, சம்ரி வினோத் கைது செய்யப்பட்டார்.


