கோலாலம்பூர், மார்ச் 28 - சாலையைப் பயன்படுத்த தகுதியற்றவை என
அடையாளம் காணப்பட் 158 விரைவு பேருந்துகளுக்கு சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) தடை உத்தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி நாடு
முழுவதும் உள்ள பஸ் முனையங்கள் மற்றும் டிப்போக்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக ஜே.பி.ஜே. தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி கூறினார்.
தடை உத்தரவு அறிக்கை வழங்கப்பட்ட பேருந்துகளில் அடையாளம் காணப்பட்ட பழுதுகளை அதன் உரிமையாளர்கள் சரி செய்தால் மட்டுமே அவை மீண்டும் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
இங்குள்ள சுங்கை பீசி டோல் சாவடியின் தெற்கு தடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பேருந்தை செலுத்தும் போது கைபேசியைப் பயன்படுத்தியது, இரண்டாவது ஓட்டுரைக் கொண்டிராதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை 1,800 பேருந்துகள் புரிந்தது கண்டறியப்பட்டது என்றார் அவர்.
இந்த நோன்புப் பெருநாள் சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாகனங்களுக்கு 22,552 குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 77,736 வாகனங்கள் சோதனையிடப்பட்ட
வேளையில் 97 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.


