ஷா ஆலம், மார்ச் 28 - இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் மாநிலம் முழுவதும் 7,000 க்கும் மேற்பட்ட சாலை பழுது தொடர்பான பிரச்சனைகளுக்கு இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் (இன்ஃப்ராசெல்) மூலம் வெற்றிகரமாக தீர்வு காணப்பட்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஃபாரிஸ் கசாலி கூறினார்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை வலையமைப்பு பழுது மதிப்பீடு (ரோண்டா) அமைப்பைப் பயன்படுத்துவது சாலைகளில் ஏற்பட்ட சேதத்தை இயங்கலை வாயிலாகக் கண்டறிய உதவுகிறது என்று அவர் சொன்னார்.
கார் டேஷ்போர்டு கேமராக்களைப் பயன்படுத்தும் இந்த ரோண்டா அமைப்பு, சேதமடைந்த சாலைகளை 24 மணி நேரத்திற்குள் சரிசெய்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட குத்தகையாளர்களுக்கு புகார்களை நேரடியாகத் தெரிவிக்கிறது என்றும் அவர் விளக்கினார்.
ஒப்பந்த முறை உண்மையில் பின்பற்றுவதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது. சேதமடைந்த சாலைகளைக் கண்டறிந்து உடனடியாக அவற்றை சீரமைக்கிறோம். ரோந்துப் பணியாளர்கள் வாரத்திற்கு இரண்டு முறை ஒரே சாலையில் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், சாலை பராமரிப்பு முறையை மேலும் மேம்படுத்தவும், மேலும் திறமையாக நிர்வகிக்கவும் இன்ஃப்ராசெல் மிகவும் விரிவான மற்றும் ஆக்ககரமான ஏ.ஐ. செயலியை உருவாக்கி வருவதாக அவர் மேலும் கூறினார்.


