ஷா ஆலம், மார்ச் 28 - சிலாங்கூர் மாநிலத்தில் முதலீடுகள் தொடர்பான உள்கட்டமைப்பு பிரச்சனைகள் குறித்து முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களிடமிருந்து கருத்துக்களை சேகரிக்க சிலாங்கூர் அரசு கருத்துக் கணிப்பைத் தொடங்கியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் பல புகார்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக திறன், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான சிலாங்கூர் சிறப்புத் தேர்வுக் குழு (செல்கேட்) விசாரணை நடத்தி வருவதாக மாநில சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்தார்.
பொதுமக்களிடமிருந்து தேவையான தகவல்களையும் கருத்துகளையும் பெறுவதற்காக சிலாங்கூர் மாநில சட்டமன்ற அகப்பக்கத்தில் ஒரு கருத்துக் கணிப்பு படிவம் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மாநிலத்தில் முதலீடுகள் தொடர்பான உள்கட்டமைப்புத் துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளைக் கண்டறிந்து ஆய்வு செய்வதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள் விசாரணைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் சிலாங்கூரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கும் தேவையான மிகவும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கு அடித்தளமாக அமையும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த கருத்துக் கணிப்பு படிவம் கூடுதல் தகவல்களைச் சேகரிப்பதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என்றும் புகார்களை அளிப்பதற்கு அல்ல என்றும் லாவ் தெளிவுபடுத்தினார்.
பெறப்படும் ஒவ்வொரு கருத்தும் சம்பந்தப்பட்டக் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும். மேலும் சிலாங்கூர் மாநில சட்டமன்றச் செயலகம் பதிலளித்தவர்களைத் தொடர்புகொண்டு தெளிவு பெறும் அல்லது தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைப் பெறும் என்றார் அவர்.
சிலாங்கூரில் புதிய முதலீடுகளை உள்ளடக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட அல்லது தொடர்புடைய முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவரும் இந்த கணக்கெடுப்பு படிவத்தை நிரப்புவதன் மூலம் பங்கேற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கருத்துக் கணிப்பு படிவத்தை சிலாங்கூர் மாநில சட்டமன்ற அகப்பக்கத்தின் மூலம் அல்லது பின்வரும் இணைப்பு வழியாக அணுகலாம்: https://forms.gle/


