குளுவாங், மார்ச் 28 - நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை
விபத்தில் இரண்டு வயது குழந்தை உள்பட ஐவர் பரிதாபமாக
உயிரிழந்தனர். இவ்விபத்து நேற்றிரவு 11.30 மணியளவில் வடக்கு-தெற்கு
நெடுஞ்சாலையின் 58.1வது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இந்த விபத்தில் வோல்வோ ரக லோரி, டோயோட்டா கேம்ப்ரி கார்,
புரோட்டோன் எக்ஸ் 50 மற்றும் ஹோண்டா ஸ்டெவேகன் ஸ்பாடா ரக
வாகனம் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாகக் குளுவாங் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி பாஹ்ரின் முகமது நோர் கூறினார்.
ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த
லோரியின் டயர் வெடித்ததைத் தொடர்ந்து அந்த லோரி அதே திசையில்
பயணித்துக் கொண்டிருந்த டோயோட்டா கேம்பிரி காருடன் உரசியது
தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த உரசலின் விளைவாக அந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து சாலைத்
தடுப்பை மோதி எதிர்த்தடத்தில் நுழைந்து புரோட்டோன் எக்ஸ் 50 மற்றும்
ஹோண்டா ஆகிய வாகனங்களை மோதியது.
இந்த விபத்தின் காரணமாக அந்த ஹோண்டா காரில் தீப்பற்றியது.
அங்கிருந்த பொது மக்கள் துரிமாக செயல்பட்டு அந்த வாகனத்தில்
இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர் என்று அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
இவ்விபத்தில் புரோட்டோன் எக்ஸ் 50 வாகனத்திலிருந்த இருவரும்
ஹோண்டா வாகனத்திலிருந்து இரண்டு வயது குழந்தை உள்பட மூவரும்
உயிரிழந்ததோடு மேலும் எண்மர் காயமடைந்தனர் என்று அவர்
சொன்னார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து 35 வயதுடைய லோரி ஓட்டுநர்
விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டார்.


