கோலாலம்பூர், மார்ச் 28 - எதிர்வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி தொடங்கி எட்டு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்படவிருக்கும் மடாணி நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இன மதங்களுக்கு இடையிலான பதட்டங்களைத் தணிப்பதற்கும், மக்களிடையே தொடர்பு மூலம் வேறுபாடுகளை மதித்து கொண்டாடுவதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு முக்கிய தளமாக அமையும் என்று பிரதமரின் ஊடக மூத்த செயலாளர் துங்கு நஷ்டீல் அபாய்டா தெரிவித்தார்.
முகநூலில் நடைபெற்ற பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கக் குறிப்பின் மூலம் அவர் அவ்வாறு கூறினார்.
பல்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மலேசியாவின் வலிமைக்கு நீண்ட காலமாகத் தூண்களாக இருந்த உன்னத மதிப்பு, அன்பு, மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை ஊக்குவிக்குமாறு டத்தோ ஸ்ரீ அன்வார் அழைப்பு விடுப்பதாக துங்கு நஷ்ருல் மேலும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா


