கோலாலம்பூர், மார்ச் 28 - ரோன் 95 பெட்ரோலுக்கான உதவித் தொகை வழங்கும் செயல்முறையை 2025-இன் பிற்பகுதியில் அரசாங்கம் அறிவிக்கும்.
இந்த வழிமுறை தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் அது விரிவாக செயல்படுத்தப்படும் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
முன்னதாக, நான் இதை பற்றி பலமுறை மக்களவையிலும் நாடாளுமன்றத்திலும் பதிலளித்திருக்கிறேன். இந்த வழிமுறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் எதையும் முன்கூட்டியே அறிவிக்க விரும்பவில்லை.
ஏனெனில், நாங்கள் உறுதி செய்ய விரும்பும் மிக முக்கியமான விஷயம் ஒரு வலுவான அமைப்பு ஆகும். 85 விழுக்காட்டிற்கும் அதிகமான மக்கள் மலேசியாவில் உதவித் தொகை விலையைப் பெறுவார்கள்.
அதுதான் மலேசியாவில் தேவைப்படும் உதவித் தொகை ஆய்வு அணுகுமுறை ஆகும். அதற்கு நாங்கள் மைகாட்' அட்டையைப் பயன்படுத்துவோம். என்றார் அவர்.
ஜாலான் செராஸில் `Rapid KL On-Demand` சேவையை பார்வையிட்டப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
தகுதியுள்ள பிரிவுகளுக்கு அந்த உதவித் தொகையை அளிப்பதற்கு MyKad அடையாள அட்டை மற்றும் மின்-பணப்பையைப் பயன்படுத்துவது தற்போது ஆய்வு செய்யப்படும் முறைகளில் ஒன்றாகும் என்று அவர் மேலும் கூறினார்.
அடுக்கு விலை நிர்ணயம் மூலம் உதவித் தொகையை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இதன் மூலம் பி40 மற்றும் எம் 40 பிரிவினர் உட்பட பெரும்பாலான மக்கள் உதவித் தொகையை பெறும் நிலையில், உயர் வருமானம் பெரும் தரப்பினர், வெளிநாட்டினர் பெட்ரோலுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவர்.
-பெர்னாமா


