ஷா ஆலம், மார்ச் 28 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) முரண்பாடான வாக்குமூலங்களை வழங்கியதாகப் பெண்மணி ஒருவர் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தனக்கெதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் 35 வயதான வி. மீனலோஷினி என்ற அந்தப் பெண்மணி மறுத்து விசாரணை கோரினார்.
அப்பெண்மணி வழங்கிய அந்த வாக்குமூலம் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) நிதி சம்பந்தப்பட்ட விசாரணையுடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி பிரிமா ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள ஒரு வளாகத்தில் சத்தியப்பிரமாண ஆணையரிடம் வழங்கிய சத்திய பிரமாண வாக்குமூலம், கடந்த 2022 ஜனவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் அதிகாரிகளிடம் வழங்கிய சாட்சியத்துடன் முரண்படுவதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
மித்ரா நிதி கோரிக்கை தொடர்பான பணப்பட்டுவாடா விவகாரங்களை குத்தகையாளர்களுடன் தாம் நேரடியாகக் கையாண்டதாகவும் இது தொடர்பாக எந்தவொரு தனிநபருடனும் ஒருபோதும் தொடர்பு கொண்டதில்லை என்றும் அவர் தனது சத்தியபிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எம் ஏ.சி.சி. அதிகாரிகளுக்கு அளித்த சாட்சியத்தில், ஒவ்வொரு குத்தகையாளருக்கும் பணம் செலுத்துவது காசோலை, இணையப் பரிமாற்றம் அல்லது ரொக்கம் மூலம் நேரடியாகச் செய்யப்படும் என்று மீனலோஷினி குறிப்பிட்டுள்ளார் என்று எம் ஏ.சி.சி. தெரிவித்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 100,000 வெள்ளி அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும்
2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 27(2)வது பிரிவின் கீழ் அந்த பெண்மணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, .
தனது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், மேலும் மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன் மீனலோஷினியை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10,000 ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இந்த வழக்கை விசாரணை வரும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
துணை அரசு வழக்கறிஞர் மசியா மொஹைடி வழக்கை நடத்தும் வேளையில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பாக வழக்கறிஞர் கே. கனகவல்லி ஆஜரானார்.


