ஜோகூர் பாரு, மார்ச் 28 - ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 266 ஆக இருந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 270 ஆகப் பதிவாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி கூறினார்.
மொத்தம் 72 குடும்பங்களைச் சேர்ந்த 236 பேர் ஸ்ரீ காடிங் தேசியப் பள்ளியிலும் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் பத்து பஹாட், ஸ்ரீ சோமெல் தேசியப் பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அவர் சொன்னார்.
கம்போங் பாரு மற்றும் கம்போங் பாரிட் பெடோங் ஆகிய பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இன்று குளுவாங் மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் தங்காக் மற்றும் கூலாய் ஆகிய இடங்களில் வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும். மாநிலத்தின் மற்ற ஏழு மாவட்டங்களில் வானிலை தெளிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.


