காஸா/இஸ்தான்புல், மார்ச் 28- வட காஸாவிலுள்ள ஜபாலியா நகரத்தை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நேற்று அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்டில்-லத்தீப் அல்-கனோவா கொல்லப்பட்டதாக அனடோலு ஏஜென்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜபாலியா அல்-பலாத் பகுதியில் உள்ள அல்-கனௌவாவின் கூடாரத்தை இஸ்ரேலியப் படைகள் தாக்கியபோது அவர் பலியானார் என்று ஹமாஸுடன் தொடர்புடைய அல்-அக்ஸா தொலைக்காட்சி கூறியது.
கடந்த மார்ச் 18ஆம் தேதி காஸா மீதான இனப்படுகொலை தாக்குதலை இஸ்ரேல்
மீண்டும் தொடங்கியதிலிருந்து 830 பாலஸ்தீனர்கள் பலியானதோடு 1,787 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்கள் என்று காஸா பகுதிக்கான சுகாதார அமைச்சு தெரிவித்தது.
காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் மறுபடியும் தொடங்கி "வெளியேறும் உத்தரவை" பிறப்பித்ததை தொடர்ந்து சுமார் 124,000 பாலஸ்தீனர்கள் மீண்டும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) குறிப்பிட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காஸாவில் நிகழ்ந்து வரும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் கிட்டத்தட்ட 50,200 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 113,700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


