கோத்தா பாரு, மார்ச் 27- நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொதுக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால் கோலாலம்பூரிலிருந்து குவா மூசாங் வழியாகக் கோத்தா பாருவுக்குச் செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
குவா மூசாங்-கோத்தா பாரு சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கிளந்தானுக்குள் நுழையும் வாகனங்களும் இதில் அடங்கும் என்று குவா மூசாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறினார்.
வாகனப் போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் பல முக்கிய இடங்களில் சிறிது நெரிசல் காணப்படுகிறது. சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகக் காவல்துறை அனைத்து போக்குவரத்து போலீசார் மற்றும் காவல் துறை உறுப்பினர்களை சிறப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளது என்று அவர் இன்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மேலும், வாகனமோட்டிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், குறிப்பாக அதிக நெரிசல் உள்ள பகுதிகளைத் தவிர்க்க அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அவர் அறிவுறுத்தினார்.


