ஷா ஆலம், மார்ச் 27 - சுகாதார அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையுடனான தனது ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் வாயிலாக மருத்துவமனைகளுக்கு ஆதரவளித்து சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை சிலாங்கூர் அரசு முன்னெடுத்து வருகிறது.
சிலாங்கூர் முழுவதும் உள்ள முக்கிய பொது மருத்துவமனைகளுக்கு தாம் மேற்கொண்ட பணி நிமித்தப் பயணங்களின் போது மருத்துவ முன்களப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இந்த வருகையின் போது மருத்துவமனை பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக தொழிலாளர் பற்றாக்குறையைக் கூறலாம். இது ஏற்கனவே உள்ள ஊழியர்களுக்கு சுமையை அளிப்பதோடு செயல்திறனை பாதிக்கிறது என அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை, காஜாங்கில் உள்ள தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மருத்துவமனை, ஷா ஆலம் மருத்துவமனை, செலாயாங் மருத்துவமனை மற்றும் கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு தாம் பயணம் மேற்கொண்டதாக ஜமாலியா குறிப்பிட்டார்.
குறைவான வாகன நிறுத்துமிடங்கள், அவசர சிகிச்சை மற்றும் வெளிநோயாளி பிரிவுகளில் கூட்டம் அதிகமாக இருப்பது மற்றும் கூடுதல் மருத்துவ ஊழியர்களின் அவசரத் தேவை ஆகியவை தம்மிடம் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளில் அடங்கும் என அவர் சொன்னார்.
இந்தச் சவால்களை சமாளிக்க மருத்துவமனை செயல்பாடுகளை முறைப்படுத்தவும் நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும் தொழில்நுட்பப் பயன்பாட்டை சிலாங்கூர் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
அத்தகைய ஒரு முயற்சிகளில் ஒன்று HSISCare செயலி ஆகும். இது செர்டாங் சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் முன்பதிவுகளை நிர்வகிக்கவும் தனிப்பட்ட சுகாதார பதிவுகளை அணுகவும் இந்த செயலி வாய்ப்பளிக்கிறது என்றார் அவர்.
இந்த அமைப்பின் வழி மருத்துவமனையிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் இணைய வழி பதிவை மேற்கொள்ள இயலும். இதன் மூலம் முகப்பிடங்களில் நெரிசலைக் குறைத்து சிகிச்சையை விரைவுபடுத்த முடிகிறது அவர் சொன்னார்..
பொது மருத்துவமனை சேவைகளை நிறைவு செய்வதற்காக சமூகத்தை மையமாகக் கொண்ட பல சுகாதார முயற்சிகளை அரசு செயல்படுத்தியுள்ளது என்றும் ஜமாலியா கூறினார்.


