உய்சோங், மார்ச் 27 - தென் கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத் தீயினால் இதுவரை 24 பேர் பலியாகியிருக்கின்றனர். தென்கிழக்கு நகரமான உய்சோங் காட்டுத்தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி 28,000 பேர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் முயற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவரும் உயிரிழந்தார்.
பழங்கால புத்த கோயில், வீடுகள், தொழிற்சாலைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்டமைப்புக்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகியதாக அரசாங்கத்தின் அவசரகால நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், வெள்ளிக்கிழமை தொடங்கிய காட்டுத்தீ, முந்தைய பல காட்டுத்தீச் சம்பவங்களை விட மோசமானது என்று தென் கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் கு தெரிவித்தார்.
பலத்த காற்று வீசுவதால் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதில் தாமதம் நிலவி வருகின்றது.
130 ஹெலிகாப்டர்கள், 4,650 தீயணைப்பு வீரர்கள் உட்பட ஏராளமானோர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-- பெர்னாமா


