கோலாலம்பூர், மார்ச் 27 - நாட்டில் கம்யூனிஸ் சித்தாந்தங்களை ஊக்குவிப்பதாகக் கூறப்படும் பதிவு செய்யப்படாத அமைப்புடன் தொடர்புடைய காணொளி பரவல் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்பில் 1966ஆம் சங்கங்கள் சட்டத்தின் 41/43வது பிரிவு, தண்டனைச் சட்டத்தின் 505(B) பிரிவு மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு ஆகியவற்றின் கீழ் புக்கிட் அமான் வகைப்படுத்தப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் தெரிவித்தார்.
கம்யூனிஸ் சித்தாந்தங்களை நுட்பத் தன்மையுடன் அல்லது வெளிப்படையாகப் புதுப்பிக்கும் எந்தவொரு முயற்சியும் ருக்குன் நெகாராவின் கொள்கைகளுக்கு எதிரானது மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை காவல்துறை கடுமையாகக் கருதுகிறது என்று அவர் கூறினார்.
நாட்டின் இறையாண்மையைக் கீழறுக்கும் அல்லது கூட்டரசு அரசியலமைப்பிற்கு முரணான சித்தாந்தங்களை பிரபலப்படுத்தும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் எச்சரித்தார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மற்றும் நாட்டின் இன நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் எந்தவொரு அறிக்கைகள், காணொளிகள் அல்லது இயக்கங்களால் எளிதில் கவரப்பட வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் அவர்.
சீனா மற்றும் தைவானின் மறு இணைப்பை ஆதரிக்கும் மற்றும் நாட்டில் கம்யூனிஸ் சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் அம்சங்கள் அடங்கியதாகக் கூறப்படும் இரண்டு நிமிடம் மற்றும் 57 வினாடிகள் கொண்ட காணொளி காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.


