கோலாலம்பூர், மார்ச் 26- வரும் ஏப்ரல் 1 முதல் தேதி தொடங்கி ரஹ்மா அடிப்படை நிதியுதவித் திட்டம் (SARA) 54 லட்சம் பேருக்கு விரிவுபடுத்துவதாக மடாணி அரசாங்கம் அறிவித்துள்ளது.
தற்போதுள்ள 700,000 பெறுநர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிகமாகும்.
தகுதியுள்ள பெறுநர்கள் 2,100 வெள்ளி வரை உதவி பெறுவார்கள் என்று நிதி அமைச்சு இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தது. கடந்த 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 1,200 வெள்ளியுடன் ஒப்பிடும்போது இந்த தொகை 75 விழுக்காடு அதிகமாகும்.
சாரா என்பது ஒரு இலக்கிடப்பட்ட உதவி அணுகுமுறையாகும். அதிகரித்த தேசிய வருமானத்தின் ஒரு பகுதியும் மானியச் செலவினங்களில் இருந்து கிடைக்கும் சேமிப்பு தொகையும் உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு உதவ மறுபகிர்வு செய்யப்படுகின்றன.
மை கார்டு வாயிலான சாரா விநியோகமும் இலக்காக கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த முறை இலக்கு தரப்பினர் அனுகூலங்களை அடிப்படை பொருட்களின் வடிவத்தில் பெறுவதை இது உறுதி செய்கிறது என்று பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த அறிக்கையில் கூறினார்.
இந்த விரிவாக்கத்தின் வழி ரஹ்மா ரொக்க நிதியுதவி (எஸ்.டி.ஆர்.) மற்றும் சாரா திட்டங்களுக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டு 1,300 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்படுவதாக கூறிய அவர் இது மக்களுக்கான அரசாங்கத்தின் ரொக்க உதவி விநியோக வரலாற்றில் மிக உயர்ந்த தொகையாகும் என்றார்.