கோலாலம்பூர், 26 மார்ச் - நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக இஸ்லாம் அங்கீகரிக்கப் பட்டிருந்தாலும் மலேசியாவிலுள்ள மற்ற மதங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் தனது அங்கீகாரத்தை பகடைக் காயாகப் பயன்படுத்தவில்லை என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
பெரும்பான்மை அல்லது சிறுபான்மை குழுவிலிருக்கும் ஒவ்வொரு குடிமகனும் நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
"பெரும்பான்மை மற்றும் கூட்டரசு மதமாக இஸ்லாம் உள்ளதால் அதன் சட்டத்தையும் நடைமுறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும். சிறுபான்மை இனத்தவர்களும் அந்த விதிமுறைகளுக்கு உட்பட வேண்டும்.
எனவே, பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையை நாம் கொண்டிருக்க முடியாது என்பதுடன் சிறுபான்மையினரின் கொடுங்கோன்மையை நாம் மன்னிக்கவும் கூடாது.
மடாணி என்ற வார்த்தைக்கு ஏற்ப ஜனநாயக மதிப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார் அவர். கருத்துக்களையும் விமர்சனங்களையும் பெறுவதற்கு அரசாங்கம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் அன்வார் கூறினார்.
இருந்தபோதிலும் ஊழல், துரோகம் மற்றும் இனப் பகைமைக்கு வித்திடும் விவகாரங்களை அரசாங்கம் முற்றிலும் பொறுத்துக் கொள்ளாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். - பெர்னாமா


