கோலாலம்பூர், மார்ச் 25 - மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.ஏ.எச்.பி.) டிஜிட்டல் அமைப்பு முறை மீது சமீபத்தில் தாக்குதல் நடத்திய இணைய ஊடுருவல்காரர்கள் 1 கோடி அமெரிக்க டாலர் (4 கோடியே 44 ஸட்சத்து 10 ஆயிரம் வெள்ளி) தொகையை கோரியதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.
இருப்பினும், அந்த இணையக் குற்றவாளிகளின் கோரிக்கைக்கு அரசாங்கம் அடிபணியவில்லை எனக் கூறிய அவர், அரச மலேசிய போலீஸ் படை, பேங்க் நெகாரா மலேசியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியுதவி அளித்து நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒரு தினத்திற்கு முன்பு எம்.ஏ.எச்.பி. க்கு எதிராக நடத்தப்பட்ட மிகவும் கடுமையான
இணையத் தாக்குதல் மற்றும் ஊடுருவல் பற்றிப் பேசினோம். அதை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து விவாதங்கள் நடந்தன. அதில் ஊடுருவல்காரர்கள் விடுத்த 1 கோடி அமெரிக்க டாலர் கோரிக்கையும் அடங்கும்.
நான் உடனடியாக 'முடியாது' என்று பதிலளித்தேன். நாட்டின் தலைமையும் அமைப்புகளும் குற்றவாளிகள் மற்றும் துரோகிகள் விடுக்கும் இறுதி எச்சரிக்கைக்கு அடிபணிய அனுமதித்தால் இந்த நாடு பாதுகாப்பாக இருக்க முடியாது என்று அவர் இங்குள்ள காவல் பயிற்சி மையத்தில் நடைபெற்ற 218வது போலீஸ் தினக் கொண்டாட்டத்தின் போது கூறினார்.
எனினும், இணையத் தாக்குதல் குறித்து பிரதமர் கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.
போலீஸ் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு குறிப்பாக நிர்வாகம் மற்றும் ஊழல் பிரச்சினைகள் குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் அரச மலேசிய போலீஸ் படை மேலும் பலப்படுத்தப்படும் என்று அன்வார் நம்பிக்கை தெரிவித்தார்.


