கோலாலம்பூர், மார்ச் 25 - இவ்வாண்டின் முதல் காலாண்டில் 60 நடவடிக்கைகள் வாயிலாக 68 பேரைக் கைது செய்த அரச மலேசிய போலீஸ் படை 10.6 கோடி வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வகையான பட்டாசுகளை பறிமுதல் செய்தது.
இவ்வாண்டு மார்ச் 23 வரை சுங்க (இறக்குமதி தடை) உத்தரவு 2023 இன் கீழ் சுயேச்சை வர்த்தக மண்டலப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து நடவடிக்கைகளின் மூலம் 48,522,220 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பொது நடவடிக்கைப் படை 32 சம்பவங்களில் 31,748,936 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகளையும் கடல் போலீசார் 20 சம்பவங்களில் 24,665,846 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகளையும் மத்திய சேமப் படை மூன்று சம்பவங்களில் 1,146,879 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்தன என்று அவர் கூறினார்.
உள்ளூர் சந்தையில் இந்தப் பட்டாசுகளைப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக பண்டிகைக் காலங்களில் அவற்றுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் கண்டுபிடிப்பதைத் தவிர்க்க தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையே, குறிப்பாக பாடாங் பெசார் மற்றும் புக்கிட் காயு ஹித்தாமில் சட்டவிரோத எல்லைகளைப் பயன்படுத்துவது, சரக்கு லாரிகள் மற்றும் விரைவுப் பேருந்துகளில் உள்ள பிற பொருட்களுடன் பட்டாசுகளை மறைப்பது போன்ற ஏராளமான தந்திரங்களைப் பட்டாசுகளை கடத்தும் கும்பல்கள் பயன்படுத்துவதாக ரசாருடின் கூறினார்.
சில கும்பல்கள் சிறிய படகுகள் அல்லது சரக்குக் கப்பல்களைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களுக்குள் கடத்தல் பொருள்களை மறைத்து கடத்துவதாகவும் அவர் கூறினார்.
கொள்கலன் கப்பல்கள் மூலம் கடல் வழியாகப் பட்டாசுகள் சரவாக்கில் உள்ள அதிகாரப்பூர்வ துறைமுகங்களுக்கு வந்து சேருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொள்கலன்கள் விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கான முறையான சுங்க ஆவணங்களுடன் வருகின்றன. ஆனால், அவற்றில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளும் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.


