பட்டர்வொர்த், மார்ச் 25 - இங்குள்ள பிறை, நாகசாரி தொழில் பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் இம்மாதம் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 10 லட்சம் வெள்ளி மில்லியன் மதிப்புள்ள பட்டாசுகள் வாணவெடிகளை சட்டவிரோதமாகக் கடத்தும் கும்பலை அரச மலேசிய சுங்கத் துறை முறியடித்தது.
அத்துறையின் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு நடத்திய சோதனையில் 28,780 கிலோ பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் அடங்கிய
1,332 அட்டைப் பெட்டிகள் ஏழு கொள்கலன்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில சுங்கத் துறை இயக்குநர் ரோஹைசாட் அலி தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் விற்பனைக்காக அந்த பட்டாசுகளும் மற்றும் வாண வெடிகளும் அந்த கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. கிடங்கு ஒரு சேமிப்பு இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்று அவர் கூறினார்.
உள்துறை அமைச்சும் அரச மலேசிய காவல்துறையும் வழங்கிய இறக்குமதி அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள விவரக் குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு பட்டாசுகளும் வாணவெடிகளும் இணங்கவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த பட்டாசுகள் மற்றும் வாணவெடிகள் அனைத்தும் 360,767.50 வெள்ளி மதிப்புடையவை. இதில் 599,189.63 வெள்ளி மதிப்பிலான வரியும் அடங்கும். மேல் நடவடிக்கைக்காக அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று இங்குள்ள பாகான் ஜெர்மால் அமலாக்கக் கிடங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இச்சோதனையின் போது சம்பவ இடத்திலிருந்த 60 வயதுடைய உள்ளூர் நபரும் கைது செய்யப்பட்டதாக ரோஹைசாட் கூறினார். அக்கும்பலுடனான அந்நபரின் பங்கு மற்றும் தொடர்பை அடையாளம் காண இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்றார் அவர்.


