கிள்ளான், மார்ச் 25 - இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை கிள்ளான்
மாவட்ட நில அலுவலகம் நில பிரீமியம் மற்றும் பெர்மிட் தொகையாக 11
கோடியே 97 லட்சம் வெள்ளியை வசூலித்துள்ளது. மாநில அரசு
நிர்ணயித்த இவ்வாண்டிற்கான வசூல் தொகையில் இது 41
விழுக்காடாகும்.
அந்த தொகையில் 18 லட்சம் வெள்ளி தொழில்முனைவோர் உதவி
உள்பட பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒதுக்கப்படுவதாகக்
கிள்ளான் மாவட்ட அதிகாரி அம்ரி இஸ்மாயில் கூறினார்.
இது தவிர பெரிய அளவிலான திட்டங்களையும் நாங்கள் மேற்கொண்டு
வருகிறோம். பல மேம்பாட்டுத் திட்டங்களின் அமலாக்கத்தை கிள்ளான்
மாவட்ட நடவடிக்கை மேம்பாட்டுக் குழு தொடர்ச்சியாகக் கண்காணித்து
வருகிறது என்று அவர் சொன்னார்.
மாரிஸ் எனப்படும் மலேசிய சாலை தகவல் முறையின் கீழ் எட்டு
திட்டங்களுக்கு குத்தகையாளர்களை நியமிக்கும் பணியில் மாவட்ட
அலுவலகம் ஈடுபட்டு வருகிறது 15 லட்சம் வெள்ளி செலவிலான
இத்திட்டம் இவ்வாண்டு மே மாதம் அமல்படுத்தப்படும் என அவர்
குறிப்பிட்டார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ணா
முன்னிலையில நடைபெற்ற மக்களுடனான நோன்பு துறப்பு நிகழ்வு
மற்றும் பண்டார் புக்கிட் ராஜா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வில்
உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, கிள்ளான் ஆற்றைச் சுத்தப்படுத்தும் சிலாங்கூர் மெரிடைம்
கேட்வே திட்டம் இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை 37.58 விழுக்காடு
பூர்த்தியடைந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


