புத்ராஜெயா, மார்ச் 25 - நாட்டில் பல மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் குறித்த முழு அறிக்கையை கல்வி அமைச்சு சேகரித்து வருகின்றது.
மாணவர்களுக்கு ஏற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் வகையில் அதற்கான பராமரிப்பு பணிகளை உடனடியான மேற்கொள்வதை உறுதி செய்ய சேகரிக்கும் தகவல்கள் ஆராயப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
'வழக்கம் போல எங்களின் நடவடிக்கை அறிக்கை கிடைத்தப் பிறகு தான் தொடங்கும். அதிகம் பராமரிப்பு தேவைப்படும் பள்ளிகளுக்கு நாங்கள் உதவிகள் வழங்குவோம். அது ஒவ்வொரு பள்ளிகளிலும் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பொறுத்து அமைந்திருக்கும் என்று அவர் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பராமரிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதையும், அதற்கான உதவிகள் வழங்கப்படுவதையும் கல்வி அமைச்சு உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
கடந்தாண்டு மற்றும் இவ்வாண்டின் தொடக்கத்தில், கெடா, திரங்கானு சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சேதங்களை நிவர்த்திச் செய்வதற்காக, 2 கோடியே 60 லட்சம் ரிங்கிட்டை வழங்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதை ஃபட்லினா சுட்டிக்காட்டினார்.
-பெர்னாமா


