ஷா ஆலம், மார்ச் 25 - சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மதிப்பீட்டு வரிச் சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நூறு விழுக்காடு அல்லது அதிகபட்சம் 500 வெள்ளி இதில் குறைவாக உள்ள தொகையை தள்ளுபடியாக வழங்க வகை செய்யும் இந்த திட்டத்திற்கு மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.
எரிசக்தி, நீர், கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகிய ஐந்து சுற்றுச்சூழல் நட்புறவு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன்னெடுப்பு, தங்கள் வீடுகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றும் பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் பெட்டாலிங் ஜெயா பருவநிலை செயல் திட்டம் 2030 இன் ஒரு பகுதியாகும். இது கார்பன் வெளியேற்றத்தை 33 விழுக்காடு குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் நேற்று பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்திற்கான நான்கு மாத விண்ணப்பக் காலம் முழுவதும் ஊராட்சி மன்றத்தின் வீட்டுக் கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்பரவுத் துறை ஒவ்வொரு கவுன்சிலர் பகுதியிலும் விளக்கக் கூட்டங்கள் மற்றும் விளம்பர நிகழ்வுகளை நடத்தும் என்றும் ஜாஹ்ரி கூறினார்.


