சிரம்பான், மார்ச் 25 - இந்த மாதத் தொடக்கத்தில் போலீஸ் அதிகாரி போல் நடித்த ஆடவர் ஒருவரிடம் இல்லத்தரசி மற்றும் ஓய்வு பெற்ற முதியவர் மொத்தம் 349,086 வெள்ளியை இழந்தனர்.
இந்த மோசடியில் 54 வயதான இல்லத்தரசி 186,000 வெள்ளியையும் 66 வயதான ஓய்வூதியதாரர் 163,000 வெள்ளியையும் இழந்ததாக நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.
போலீஸ்காரர் எனக் கூறிக் கொண்ட அடையாளம் தெரியாத நபரிடமிருந்து புகார்தாரர்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் மீது அந்நபர் குற்றஞ்சாட்டியதாகவும் அவர் கூறினார்.
கடந்த மார்ச் 7 முதல் 22 வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும் அந்நபர் கூறியுள்ளார். பின்னர் இரண்டு புகார்தாரர்களும் எட்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ஒன்பது இணையப் பரிவர்த்தனைகளின் மூலம் மொத்தம் 349,086 வெள்ளியை மாற்றியுள்னர் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அதே நாள் மாலை 6.24 மணிக்கு தனது துறைக்கு புகார் கிடைத்ததாக அறிக்கை ஒன்றில் அப்துல் மாலிக் கூறினார். இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


